புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஓராண்டில் எங்கள் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. உள்கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. மழையால் சேதமான சாலை, பாலம் வேலை தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்ந்து அரசுக்கு வருவாய் உயர்ந்துள்ளது. அறிவித்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். அரசின் எந்த உதவியும் பெறாத வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். இத்திட்டம் அடுத்த மாதம் ஜனவரி முதல் வழங்க முடிவு செய்துள்ளோம்.
பொங்கலுக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் 13,000 பெண்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவையும் ஜனவரி முதல் வழங்கப்படும்” என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை வைத்தனர். இதையேற்று பால் கொள்முதல் விலை ரூ.34ல் இருந்து ரூ.37ஆக உயர்த்தியுள்ளோம். இன்று முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. 2021-22ஆம் ஆண்டு கால்நடை தீவனத்திற்கான மானியத்தொகை வங்கிக் கணக்கில் 4.5 கோடி ரூபாய் செலுத்தப்படும். இதன் மூலம் ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
பொங்கலையொட்டி அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ. 470 மதிப்புள்ள பொங்கள் அங்கன்வாடி மூலம் தரப்படும். இதற்கு ரூ. 17.5 கோடி ரூபாய் தரப்படும். ரேஷன்கடைகளைத் திறந்து பொருட்களை தருவதுதான் அரசின் எண்ணம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நான்கு மாதம் சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ. 2400-ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ. 1200-ம் பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்கு ரூ. 67 கோடி ஒதுக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும், “மாநில அந்தஸ்துக்காக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக நல அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து சம்பந்தமாக மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்ற உள்ளோம். அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக நல அமைப்பு பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு டெல்லியில் நேரடியாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். தொடர்ந்து கேட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாய் போராடி தான் சுதந்திரம் பெற்றோம்” எனக் குறிப்பிட்டார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் முக்கியம். அதற்கு மாநில அந்தஸ்து அவசியம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.