நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான வங்கிப் பட்டியல் நிதி ஆயோக்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக அந்தப் பட்டியலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதற்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், பல்வேறு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.
இதனைக் கருத்தில்கொண்டு, மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மனு அளித்தனர். அதில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐஓபி வங்கி ஆகியவற்றைத் தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், வங்கிகள் தனியார்மயம் விவகாரம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "பொதுத் துறை வங்கிகளில் எவற்றை தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவுசெய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் சூடுபிடிக்கும் பெகாசஸ்: இரு அவைகளும் தொடர் ஒத்திவைப்பு