புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தேவபொழிலனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் இந்த முறை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் உழவர்கரை தொகுதியில் தேவபொழிலன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை வெற்றி பெறச் செய்து இந்த முறை விடுதலை சிறுத்தை கட்சி பிரதிநிதி புதுச்சேரி சட்டப்பேரவை செல்ல மக்கள் முழு ஆதரவு தாருங்கள் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களை விலை பேசி நாராயணசாமி அரசை கலைத்தது பாஜக, என்ஆர் காங்கிரஸ்தான். பாஜக தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் புதுச்சேரியையும் குறி வைத்துள்ளது. பாஜகவால் காங்கிரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை கட்டுப்பாடுக்கு கொண்டுவர முடியும். எனவே அவர்கள் மூலம் புதுச்சேரியில் ஆட்சிக்கு வரலாம் என்ற கற்பனையில் உள்ளனர்.
புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் நிலை வந்தால் அதன் பாதிப்பு தமிழ்நாட்டுக்கும் இருக்கும். பாஜக வந்தால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படும், மத உணர்வுகள் தூண்டப்படும், புதுச்சேரியில் அமைதி இருக்காது. எனவே எக்காரணம் கொண்டும் பாஜக ஆட்சி அமைக்க இடம் தரவேண்டாம் என்றார். அதன்பிறகு அரியாங்குப்பம், மணவெளி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.