ரத்லம் : ராமாயனத்தில் சீதையை கடத்திச் சென்ற ராவணனின் உருவ பொம்மை எரிக்கும் விழாவாக தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் மத்திய பிரதேச மாநிலம் சிக்லானா கிராமத்தில் ராவணனின் மூக்கை அறுக்கும் விநோத பண்டிகையை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பெண் சக்தியை மதிக்காதவர்கள் அழிந்து போவார்கள் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த விநோத பண்டிகை கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராமாயண புராணத்தில், ராமனின் சகோதரர் லக்ஸ்மணன், ராவணனின் சகோதரி சூர்ப்பனகையின் மூக்கைத் துண்டித்த கதையைப் போலவே இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
சைத்திர நவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் அடுத்த சிக்லானா கிராமத்தில் இந்த விநோத பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சிக்லானா கிராமத்தில் பல ஆண்டுகளாக ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுவதற்கு பதிலாக அவரது மூக்கை அறுக்கும் விழாவை கொண்டாடி வருவதாக மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த விழாவை முன்னிட்டு கிராம மக்கள் தங்களுக்கு மாறு வேடம் அணிந்து ராமர் மற்றும் ராவணின் படைகளை போல் தங்களுக்குள் போரிட்டுக் கொள்கின்றனர். விழாவின் இறுதியில் இலங்கை மன்னர் ராவணனின் மூக்கை அறுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
கிராமம் முழுவதும் ராமரின் ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட் பின், ராமர் மற்றும் ராவணன் படைகள் சந்திக்கின்றன. தொடர்ந்து ராமனின் படை ராவணனைப் பின்பற்றுபவர்களைத் தாக்குகிறது. அதன்பின் ராவணனின் மூக்கு அறுக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த விழா கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க : இந்து வன்முறை தடுப்பு - அமெரிக்காவில் இந்துபோபியா எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்!