நாக்பூர்: முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் வெள்ளிக்கிழமை (ஜூன்4) ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் உள்ளார்.
ஆனால் அமைச்சர்கள் பலர் சூப்பர்பவர் முதலமைச்சர்கள் போல் செயல்படுகின்றனர். பொதுமுடக்கம் குறித்து ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் குளறுபடி
இந்த அமைச்சர்கள் தங்களை முதலமைச்சர்களாக கருதுவதால் அவர்கள் அரசின் கொள்கை முடிவுகளை கூட தாங்களாகவே அறிவிக்கின்றனர். இந்த அறிவிப்பின் மூலம் நற்பெயரை பெற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
முன்னதாக அமைச்சர் விஜய் வதேட்டிவார், 18 அல்லது 36 மாவட்டங்களில் பொதுமுடக்கம் ஜூன்4ஆம் தேதி அகற்றப்படலாம் என்றார். ஆனால் தற்போதுவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. ஒரு முதலமைச்சர் அரசின் கொள்கை முடிவுகள் முக்கிய நிகழ்வுகளை அறிவிக்க அமைச்சரை தேர்ந்தெடுப்பார். அவர் அதுதொடர்பாக அறிவிப்பார், ஆனால் தற்போது நடப்பது முறையல்ல.” என்றார்.
கரோனா மரணம் மறைப்பு
கரோனா மரணங்கள் குறித்து கூறுகையில், “மாநிலத்தில் கரோனா இறப்புகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. மாநிலம் முழுக்க இந்த ஏமாற்று வித்தைகள் தொடர்கின்றன. குறிப்பாக மும்பையில் கோவிட்-19 வைரஸினால் இறந்தவர்களை பிற நோயால் இறந்ததாக கூறியுள்ளனர். இவ்வாறு 40 சதவீதம் பேரின் மரணங்கள் இறப்பு அறிக்கையில் மாற்றப்பட்டுள்ளன” என்றார்.
மராத்தா இடஒதுக்கீடு
தொடர்ந்து மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சம்பாஜி சத்ரபதி கூறிய கருத்துகளில் தவறில்லை. இதில் விமர்சிக்கவும் ஏதுவுமில்லை. மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு அவர் போராடுகிறார். அவரின் நிலைப்பாட்டில் தவறில்லை என்றார்.
இதையும் படிங்க: மாசுபாட்டில் கவலைகொள்ள வேண்டுமே தவிர கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் அல்ல - சிவசேனா எம்பி