புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா ஊரடங்கின்போது திரையரங்கங்கள் மூடப்பட்டு, பின்னர் கரோனா காலம் முடிவடைந்த பிறகு, திரையரங்குகள் திறக்கப்பட்டன. அப்போது மக்களின் நலன் கருதி, கட்டணங்கள் குறைக்கப்பட்டன. அன்றிலிருந்து 120 ரூபாய் டிக்கெட் ஒன்று 100 ரூபாயாகவும், 100 ரூபாய் டிக்கெட்டுகள் 75 ரூபாயாக குறைக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் இருந்து வந்தது.
தற்போது கரோனா காலங்களிலிருந்து கடந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், குறைக்கப்பட்ட திரையரங்கு கட்டணங்களை மீண்டும் உயர்த்துமாறு அனைத்து திரையரங்கு சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன், திரையரங்கு கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க: களைகட்டும் தியேட்டர்கள்.. தீபாவளி ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை!
அதன்படி, 3ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்கிறது. 2ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், முதலாம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது.
160 ரூபாய் என இருந்த பாக்ஸ் டிக்கெட் 180 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 30 ரூபாய் என உயர்த்தப்படுகிறது. இக்கட்டண அதிகரிப்பு நாளை (நவ.10) முதல் அமலுக்கு வருகிறது.
இதையும் படிங்க: பொங்கல் ரேஸில் இணைந்த கேப்டன் மில்லர்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போக காரணம் என்ன?