கரோனா தடுப்பு மருந்து மற்றும் கரோனாவுக்குப் பிந்தைய மேலாண்மை குறித்த இணைய கருத்தரங்கை நெல்லை சாராள் தக்கர் கல்லூரியுடன் இணைந்து இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் நேற்று (ஜூன்.15) காலை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில், மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் தலைமை உரையாற்றினார். அப்போது,"சென்னை, கோவிட் தொற்று ஏற்படும் வாய்ப்புகளைத் தடுக்கவும், ஒரு வேளை பாதிப்பு ஏற்பட்டால், அதன் தீவிரத்தை குறைக்கவும், இணை நோய்த்தன்மை உடையவர்களுக்கு அரசு தடுப்பு மருந்து வழங்கி வருகிறது.
தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களிடையே கோவிட்-19 தடுப்பு மருந்தின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்" என்றார்.
அதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் எம்.சரோஜா சிறப்புரை ஆற்றினார். அப்போது கோவிட்-19 பெருந்தொற்றின் இன்னொரு அலையின் ஆபத்தான விளைவுகளை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பு மருந்து மட்டுமே.
மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
தொற்று ஏற்படும் ஆபத்து இல்லாத பிரிவினரின் மூலம் அடுத்தவருக்குப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால், தடுப்பு மருந்து பெறுவது மிகவும் முக்கியம். கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களும், சிறிது காலத்திற்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலம் இத்தகையோர் பயன் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது. தங்களையும், தங்களை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாப்பதற்காகப் பாலூட்டும் தாய்மார்களும், பாதிக்கப்படக்கூடிய பிரிவினரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக முன் வருகின்றனர்" என்றார். முன்னதாக, கோவிட்-19 தடுப்பு மருந்து குறித்த பல்வேறு கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என எடுத்துரைத்தார்.
தொடர்ந்து வெள்ளநாடு சித்தா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சி.செல்வகுமார் கூறுகையில், இணை நோய்த்தன்மையுடையோர் கோவிட்டுக்குப் பிந்தைய காலத்தில் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இணை நோய்களின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான உணவு முறையைக் கடைபிடித்து, இதயம் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க கிராம்பு, ஓமக்குடி நீரை உட்கொள்ள வேண்டும். கரோனா பாதிப்புக்கு பின்னர், நெல்லிக்காய் சவன்யபிராசம் போன்ற புரதச் சத்து உள்ளவற்றையும், வேர்க்கடலை போன்ற துத்தநாக சத்து உள்ள உணவுகளையும், வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நிலவேம்பு குடிநீர் வைரஸ் பாதிப்பை திறம்பட குறைக்கும். கரோனாவில் இருந்து குணமடைபவர்களுக்கு மூட்டு வலி, சோர்வு போன்றவை சிக்குன் குனியா நோயாளிகளுக்கு ஏற்பட்டது போன்று மாதக் கணக்கில் நீடிக்கலாம் என்றும், முருங்கை இலை சூப் போன்ற இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
அதிக மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்பை முள்ளங்கி சூப்பின் மூலம் குறைக்கலாம்''என்றார்.
திருநெல்வேலி கள விளம்பர அலுவலர் ஜேக்கப் கூறுகையில், ''முறையான கோவிட் நடத்தைமுறை மற்றும் தடுப்பு மருந்தின் ஆகிய இரண்டு வழிகளின் மூலம் மட்டுமே இந்த மோசமான சூழ்நிலையை கடக்க முடியும். தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்கியதன் மூலம் மூன்றாம் அலையை தடுத்த நாடுகள் பல உள்ளன" என்றார்.
நிகழ்ச்சியில் சாராள் தக்கர் கல்லுரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சி. கீதா நன்றி உரையாற்றினார்.
சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்த இணைய கருத்தரங்கில், கேள்வி பதில் நிகழ்வின் மூலம் பல்வேறு சந்தேகங்கள் நிபுணர்களால் நிவர்த்தி செய்யப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.