கேரளா மாநிலம், இடுக்கி, மாங்குளம் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்துள்ளனர். அப்பகுதி பொதுமக்களின் வீடுகளில் வளர்த்து வரும் கால்நடைகளையும் தினசரி சிறுத்தை தாக்கி கொன்று வந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட வனத்துறையிடம் முறையிட்டு சிறுத்தையினை பிடிப்பதற்கான கூண்டுகளும் அமைக்கப்பட்டன. எனினும், சிறுத்தை அதில் சிக்காமல் இருந்தது. இந்நிலையில், அம்பதாம்பதி மலையோரப் பகுதியைச் சார்ந்த கோபாலன் என்ற கூலித்தொழிலாளி காட்டு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது, அவரை சிறுத்தை திடீரென தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த கோபாலனை மீண்டும் சிறுத்தை தாக்க வந்தபோது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கையில் இருந்த கத்தியால் சிறுத்தையை வெட்டியுள்ளார். இதில் சிறுத்தையின் முகத்தில் வெட்டு காயமடைந்ததும் சிறுத்தை கோபாலனை விட்டுவிட்டு சிறிதுதூரம் சென்று கீழே விழுந்து உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்து கிடந்த கோபாலனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புலியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாரியம்மன் கோயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களைப் பசியாற சாப்பிட்டுச் சென்ற யானைகள்