டெல்லி: 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு ஆட்சியை பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே அக்கட்சி தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து இருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 45 வேட்பாளர்கள் கொண்ட 2வது பட்டியலை நேற்று (அக். 28) வெளியிட்டது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனுக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஜூபிளி ஹில்ஸ் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஜூபிலி ஹில்ஸ் தொகுதியை தனக்காக ஒதுக்கியதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியை எனக்கு ஒதுக்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அருமையான வாய்ப்பை வழங்கியதற்காக மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் டிபிசிசி தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் ஆசியுடன் தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பேன்.
நாங்கள் வெற்றி பெறுவதற்கு இது சரியான நேரம். எங்களிடம் சரியான நபர்கள் உள்ளனர். நாங்கள் கடினமாக உழைத்து வருகிறேம். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். மேலும், நகர்ப் புறங்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்ற இடங்களில் இல்லை. எனவே நாங்கள் அதில் கவனம் செலுத்துவோம்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: Rohit Sharma: இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டியில் களம் இறங்கிய ரோகித் சர்மா!