ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பாபு சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஹூரியத் மாநாடு கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் கனியின் பெயர் வெளியே வந்தது. அதன் அடிப்படையில், கடந்த வாரம் அப்துல் கனிக்கு ஜம்மு-காஷ்மீரின் புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியது.
அதன்படி, நேற்று(நவ.26) ஜம்முவில் உள்ள கூட்டு விசாரணை மையத்தில் அப்துல் கனியிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலமாக நிதியுதவி செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அப்துல் கனியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்குகளில் கனிக்கு முக்கிய பங்கு இருப்பதாக சந்தேகம் உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஹூரியத் மாநாடு என்பது ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரிக்கையை முதன்மையாக கொண்ட கூட்டமைப்பு. இதில் 26 பிரிவினைவாத அமைப்புகள் இருந்தன. இந்த கூட்டமைப்பு, ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. தொடக்கத்தில் வீரியமாக இருந்த இந்த அமைப்பின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்துவிட்டன.
இதையும் படிங்க:எல்கர் பரிஷத் கலவர வழக்கு: பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் விடுதலை...!