புதுச்சேரி: உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பின் 3 ஆண்டுகளுக்குப் பின் இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று அடிக்கடி உச்சம் தொட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் H3N2 என்னும் வைரஸ் காய்ச்சல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.
குறிப்பாக டெல்லி, மேற்கு வங்கம் மாநிலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், "புதுச்சேரியில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கல்வித்துறை தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருகிற 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆவின் குளறுபடிக்கு திமுக அரசு தான் காரணம்: ஓபிஎஸ் விளாசல்!