ஐதராபாத்: தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமூக ஓய்வூதியம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்டவற்றின் மூலம் பெண்கள் ரூ.4 ஆயிரம் வரை பயனடையலாம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காலேஸ்வரம் திட்டத்தின் மெடிகடா தடுப்பணைக்கு அருகில் உள்ள அம்பத்பள்ளி கிராம மக்கள் மத்தியில் பேசிய அவர், "தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் அனைத்துப் பணத்தையும் திரும்பக் கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இங்கு உள்ள முதலமைச்சரின் கொள்ளையினால் அதிகம் பாதிக்கப்பட்டது தெலங்கானா பெண்கள் தான் என கூறிய அவர், முதலமைச்சர் கொள்ளையடித்த தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“முதல் கட்டமாக, ஒவ்வொரு மாதமும் சமூக ஓய்வூதியமாக, பெண்களின் வங்கிக் கணக்கில், 2,500 ரூபாய் செலுத்தப்படும். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.1,500 மிச்சமாகும், தற்போது ரூ.1,000க்கு விற்கப்படும் எல்.பி.ஜி சிலிண்டரை ரூ 500க்கு வழங்கப்படுவதோடு, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் ரூ.1,000க்கு வழங்கப்படும். இவற்றின் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ 4,000 பயனடைவீர்கள். இதுவே மக்கள் அரசாங்கம் என அழைக்கப்படுகிறது” என அவர் கூறினார்.
தெலங்கானாவில் ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் அவர், “வரும் தேர்தலில் காங்கிரஸுக்கும், கே.சி.ஆர் தலைமையிலான கட்சிக்கும் இடையே போட்டி இருந்தாலும், பிஆர்எஸ், பாஜக, எம்ஐஎம் ஆகிய கட்சிகள் ஒரு பக்கம் போட்டியிடுகின்றன. எம்ஐஎம் மற்றும் பிஜேபி பிஆர்எஸ் ஐ ஆதரிக்கின்றன. எனவே நிலப்பிரபுத்துவ ஆட்சியை அகற்றி, மக்கள் ஆட்சியை அமைக்க நீங்கள் காங்கிரஸை முழுமையாக ஆதரிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
“காலேஸ்வரம் திட்டம் கே.சி.ஆருக்கு பணம் சம்பாதிப்பதற்கான "ஏடிஎம்" போல மாறிவிட்டது என்று குற்றம் சாட்டிய ராகுல், இந்த இயந்திரத்தை இயக்க, தெலங்கானாவில் உள்ள அனைத்து குடும்பங்களும் "2040 வரை ஆண்டுக்கு 31,500 ரூபாய் செலுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தோனேசியாவில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை?