ஹைதராபாத்: இன்றைய நவநாகரிக உலகில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. உலகமயமாக்கலின் பின்னணியில் கிராமப்புற இளைஞர்களும், படித்தவர்களும் அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிசயங்களைப் படைத்து வருகின்றனர்.
உலகமயமாக்கலின் சூழலில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியமாக உள்ளது. நாட்டில் எந்த தொலைதூர புதிய பகுதி அல்லது நகரம், நகரம் போன்றவற்றுக்கு நாம் எங்கு சென்றாலும் கூகுள் மேப்பைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அதே மனப்பான்மை கொண்ட கிராமப்புற இளைஞர்கள் கூகுள் உள்ளூர் வழிகாட்டிகளாக ஆகி உள்ளனர்.
தான் சந்தித்த கசப்பான அனுபவத்தை சவாலாக எடுத்துக் கொண்டு, தன்னைப் போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் 64,500-க்கும் மேற்பட்ட இடங்களை கூகுள் மேப்பில் பதிவிட்டு கூகுள் நிறுவனத்திடம் நற்சான்றிதழை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது, அபூர்வமான கூகுள் லொகேஷன் பேட்ஜ் பின்னைப் பெற்று இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார், தெலங்கானா மாநிலத்தின் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த நாகர்ஜூனா வங்கயாலபதி. இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைக்கு வாய்ப்பு அளித்தால் இணைந்து செயல்படத் தயார் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பி.டெக். பட்டதாரியான நாகர்ஜூனா வங்கயாலபதி, தெலங்கானா மாநிலம் சூர்யப்பேட்டை மாவட்டத்தின் சிலுகுர் பகுதியைச் சேர்ந்தவர். அரசு மற்றும் கார்ப்பரேட் வேலைகளுக்கு முயற்சிக்காமல், தந்தை ராம்பாபு மற்றும் தாய் நாகேந்திரம்மா உடன், சொந்த ஊரிலேயே இருந்து வருகிறார். இவரே பணிவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கி வருகிறார்.
வீட்டில் இருந்து கொண்டே மின் ஒப்பந்த வேலைகளை செய்யும் நாகர்ஜூனா வங்கயாலபதி, டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில், விவசாய நிலங்களை சர்வே செய்யும் பணியையும், உள்ளூர் மக்களுக்காக மேற்கொண்டு வருகிறார்.
கணினி அறிவின் காரணமாக, நாகர்ஜூனா வங்கயாலபதிக்கு, கூகுள் மேப்ஸ் தொடர்பான புரிதல் சிறப்பாகவே இருந்தது. இந்தியாவில் உள்ள இடங்களைப் போலவே, தாய்லாந்து நாட்டில் உள்ள இடங்களின் விவரங்களையும், கூகுள் மேப்ஸில் சேர்த்து வந்தார். இவ்வாறாக, ஆயிரக்கணக்கான இடங்களின் விவரங்களை, கூகுள் மேப்ஸில் சேர்த்ததற்காக, கூகுள் நிறுவனம், இவருக்கு பேட்ஜ் பின் வழங்கி, கவுரவித்து உள்ளதோடு மட்டுமல்லாது, இந்தியாவின் உள்ளூர் வழிகாட்டி ஆகவும் அவரை நியமித்து கவுரவப்படுத்தி உள்ளது.
கூகுள் பேட்ஜ் பின், இவர் பெற்றுள்ள நிலையில், உலகிலேயே இந்த கவுரவம் பெறும் இரண்டாவது நபர் என்ற பெருமையை, நாகர்ஜூனா வங்கயாலபதி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், விசாகப்பட்டினம் மாவட்டத்தின் படேரு கிராமத்தில், மின் சம்பந்தப்பட்ட பணிக்காக, இரவுவேளையில் சென்றிருந்தார், நாகர்ஜூனா வங்கயாலபதி. கூகுள் மேப் நேவிகேசன், தவறான தகவல்களை அளிக்கவே, அவர் மிகுந்த சிரமப்பட்டார். அந்த இடம், நக்சல்கள் பாதிப்பு அதிகம் கொண்ட பகுதி என்பதால், கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
பின், தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில், கூகுள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார். இதற்கு கூகுள் நிறுவனமும் பரிசீலித்தது. தவறான தகவல்களுக்கு வருத்தம் தெரிவித்த கூகுள் நிறுவனம், இந்த தவறுகளைக் களைய அறிவுரை தருமாறு கேட்டுக் கொண்டது.
பின் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றத் துவங்கிய நாகர்ஜூனா வங்கயாலபதி, கூகுள் மேப்ஸில், லொகேசன்களை பதிவிடத் துவங்கினார். முதலில் தனது வீட்டை பதிவிட்ட நாகர்ஜூனா வங்கயாலபதி, அதனுடன் தனது பெயர், வீடு அமைந்து இருக்கும் தெரு, தொலைபேசி எண் உள்ளிட்டவைகளை சேர்த்தார். இது நல்ல பலன் அளிக்கவே, தான் மேற்கொண்டு வரும் டிஜிட்டல் நில அளவைப் பணி, மின் வேலைகள் தொடர்பான இடங்களையும், கூகுள் மேப்ஸில் பதிவிடத் துவங்கினார். இதன்மூலம், கூகுள் நிறுவனம் மட்டுமல்லாது, கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெறத் துவங்கினார்.
பின் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், கார்கில், லடாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்ததோடு மட்டுமல்லாது, ஒரு இடத்திற்கும், மற்றொரு இடத்திற்கும் எவ்வளவு தூரம், பெட்ரோல் ஸ்டேசன் எவ்வளவு தொலைவு? இரவு விடுதி இருந்தால், அதன் தொலைவு, வாகன டயர் பஞ்சர் கடை இருக்கும் தொலைவு உள்ளிட்ட விவரங்களைத் தொகுத்து, கூகுள் மேப்ஸில் தொகுத்து அளித்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செனாப் ரயில் பாலம், அம்மாநிலத்தின் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அந்த ரயில் பாலத்துடன், அங்குள்ள சுற்றுலா தலங்களின் விவரங்கள், கோவில்கள், நகரங்கள், இந்தியா கேட் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகள் உள்ளிட்டவைகளைப் பதிவிட்டார். அதேபோல், தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற இடங்கள், நகரங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவைகளை 360 டிகிரி கோணங்களில் பார்க்கும்படி, போட்டோக்களைப் பதிவேற்றினார். நாகர்ஜூனா வங்கயாலபதி இதுவரை, 13,766 போட்டோக்களை பதிவேற்றி உள்ளார்.
மத்திய அரசு அனுமதி வழங்கினால், இந்திய வரைபடத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார் என்று நாகர்ஜூனா வங்கயாலபதி மேலும் தெரிவித்து உள்ளார்.
நாகர்ஜூனா வங்கயாலபதி மேற்கொண்ட பணிகளை அங்கீகரித்து உள்ள கூகுள் மேப்ஸ் நிறுவனம், இம்மாதம் 7ஆம் தேதி, ஜெர்மனியில் உள்ள கூகுள் மேப்ஸ் தலைமையகம், நாகர்ஜூனா வங்கயாலபதிக்கு, கூகுள் மேப்ஸ் உள்ளூர் வழிகாட்டி என்ற பணியை வழங்கி உள்ளதோடு மட்டுமல்லாது, கூகுள் மேப் சிம்பல் பேட்ஜ் பின் வழங்கி கவுரவித்து உள்ளது. இந்த பின் பெறும், உலகின் இரண்டாவது நபர் நாகர்ஜூனா வங்கயாலபதி என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்ஜூனா வங்கயாலபதி மொத்தமுள்ள 10 புள்ளிகளில் 9 புள்ளிகள் பெற்று உள்ளார். ஆண்டிகுவா மற்றும் பார்புட தீவைச் சேர்ந்த டுவைன் லுபி, இந்த பேட்ஜ் பின் பெற்றுள்ள முதல் நபர் ஆவார். இவர் 416நாட்களில், 110 முறை பயணம் மேற்கொண்டு, 312 நகரங்கள், 1426 இடங்கள் குறித்த தகவல்களைப் பதிவிட்டு உள்ளார். தான் இதை லாப நோக்கில் செய்யவில்லை என்று தெரிவித்து உள்ள அவர், நண்பர்கள், நலம் விரும்பிகளின் மகிழ்ச்சிக்காகவே செய்ததாகவும், தனக்குரிய அங்கீகாரம், கூகுள் நிறுவனத்திடம் இருந்து கிடைத்து உள்ளதாக, அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதுவரை 1.2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ள நாகர்ஜுனாவின், 99 சதவீதம் துல்லியமான டிஜிட்டல் நில ஆய்வுகளை மேற்கொண்டு, 360 டிகிரி புகைப்படங்களை எடுத்து கூகுளில் பதிவேற்றம் செய்து உள்ளார். GPSலிருந்து VPSக்கு மாறியதால், அவர் தனது தாய்நாட்டிற்கு சேவை செய்ய இந்தியாவில் உள்ள செயற்கைக்கோள் அமைப்புகளுக்கு தனது சேவைகளை வழங்குவதாக குறிப்பிட்டு உள்ளார்.