ஹைதராபாத்: தெலங்கானா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள முஸ்டாபாத்தை சேர்ந்தவர்கள் ஜான்கா தீபிகா - பாலகிருஷ்ணன் தம்பதி. இவர்களுக்கு பரத் என்ற மகனும், ஷிவானி என்ற மகளும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான பாலகிருஷ்ணன், தினமும் குடித்துவிட்டு வந்து தீபிகாவை அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இவர்களின் 9 வயது மகன் பரத் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையின் இரக்கமற்ற செயலை தினமும் கவனித்த பரத் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது தாயை தினமும் குடித்துவிட்டு வந்து தாக்கும் தந்தை மீது, வீட்டின் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு நேற்று காலையில் (ஆக. 25) சென்றுள்ளார். தனது தந்தை குறித்து அங்கிருந்த உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ்வரலுவிடம் கூறியுள்ளார்.
யார் உன்னை புகார் கொடுக்க அனுப்பியது என காவலர் கேட்டதற்கு, தானாகவே வந்ததாக அந்த சிறுவன் பதிலளித்துள்ளான். இங்கு வந்தால் உனக்கு நீதி கிடைக்கும் என்பதை நம்புகிறாயா"என்ற கேள்விக்கு,"இங்கே என் பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்று நம்பி வந்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
சிறுவனின் இந்த பதில், உதவி ஆய்வாளரை மிகவும் கவர்ந்துள்ளது. அவர்களின் பெற்றோரை உடனடியாக காவல் நிலையம் அழைத்த காவலர்கள், தந்தை பாலகிருஷ்ணனிடம் தனி ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட வேண்டாம் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு