தெலங்கானா: மஹபூபாபாத் மாவட்டம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெட்யா (62). இவர், அப்பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், மஹபூபாபாத் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
சிகிச்சைக்காக பணம் சேர்த்து வந்த முதியவர்
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும், இதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்சியடைந்த முதியவர், தன்னிடம் பணம் இல்லாததால் அறுவை சிகிச்சையைத் தள்ளி வைத்துவிட்டு. வயிற்றுவலியோடு காய்காறி வியாபாரம் செய்து சிகிச்சைக்காக பணம் சேர்க்க ஆரம்பித்தார்.
பணத்தைக் குதறிய எலி
வெறும் 500 ரூபாய் நோட்டுகளாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை அவர் சேமித்து வைத்திருந்துள்ளார். இந்நிலையில், சில நாள்களாக வயிற்று வலி அதிகம் இருக்கவே தன்னிடமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சிகிச்சைக்கு செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து, வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து பார்த்தபோது, பணம் மொத்தத்தையும் எலி குதறி வைத்திருந்தது அவருக்குத் தெரிய வந்தது. பல நாள்களாக வயிற்று வலியோடு சிறுகச் சிறுக சேர்த்த பணம் மொத்தமும் வீணாகியதைக் கண்டு முதியவர் தற்போது விரக்தியில் ஆழ்ந்துள்ளார்.
அரசுக்குக் கோரிக்கை
தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரின் அறிவுரையின் பேரில் கிழிந்த பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு முதியவர் சென்றுள்ளார். ஆனால், வங்கி அலுவலர்கள் அதனை வாங்க மறுத்துவிட்டனர். மேலும், ரிசர்வ் வங்கியை அணுகுமாறும் அவருக்கு அறிவுறுத்தினர்.
இந்நிலையில், தனது கிழிந்த பணத்தை வாங்கிக்கொண்டு வேறு பணம் தர வேண்டும், இல்லையெனில் தனது அறுவை சிகிச்சைக்கான பணத்தை மருத்துவமனையில் செலுத்த வேண்டும் என தெலங்கானா அரசுக்கு முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி வைரலானதால் பணத்தை திருப்பி கொடுத்த வடமாநில இளைஞர்!