ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, அம்மாநில அரசு ஜூன் 9ஆம் தேதிவரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்கு காலை ஆறு மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று (ஜூன் 8) அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, நாளை மறுநாள் (ஜூன் 10) முதல் ஜூன் 19ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பு செய்ய தெலங்கானா மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி, ஜூன் 10ஆம் தேதிமுதல் தொடர்ந்து 10 நாள்கள் ஊரடங்கு தளர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அத்தியாவசிய சேவைகளுக்கு காலை ஆறு மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலை ஆறு மணிமுதல் மாலை ஐந்து மணிவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேர ஊரடங்கு (மாலை 6 மணி முதல் காலை 6 மணி) தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வராத சாத்துப்பள்ளி, மதிரா, நல்கோண்டா, நாகர்ஜூனா சாகர், தேவரகொண்டா, மிரியலகுடா, முனுகோடு ஆகிய இடங்களில் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இதையும் படிங்க: ’GCC Vidmed’ செயலி, வாட்ஸ்அப் மூலம் சென்னையில் 2500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை