ஐதராபாத் : தெலங்கானாவில் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 10 லட்ச ரூபாய் காப்பீடு திட்டங்களை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.
அண்மையில் நடந்து முடிந்த 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. மாநிலம் உருவானது முதல் ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக விவசாயிகளுக்கு 2 லட்ச ரூபாய் கடன் தள்ளுபடி, பெண்கள், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவி, ரயத்து பரோசா திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 16 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்பில் நேற்று (டிச. 8) அவர் கையெழுத்திட்டார். தொடர்ந்து, அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகாலட்சுமி திட்டம் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 10 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கும் ஆரோக்யஸ்ரீ திட்டத்தை இன்று (டிச. 9) இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் இலச்சினை மற்றும் போஸ்டரை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டார். இந்த விழாவில், இடைக்கால சபாநாயகர் அக்பருதீன் ஒவைசி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனார். விழாவில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "இன்று தெலங்கானா மக்களுக்கு பண்டிகை நாள். தெலங்கானாவின் தாய் என்றால் அது சோனியா காந்தி தான். சோனியா காந்தி இங்குள்ள மக்களுக்கு ஆறு உத்தரவாதங்களை வழங்கினார்.
இன்று, ஆறு உத்தரவாதங்களில் இரண்டு உத்தரவாதங்களை செயல்படுத்தும் பொறுப்பை மாநில அரசு எடுத்துள்ளது. இன்று முதல் மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம். தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் அடுத்த 100 நாட்களில் செயல்படுத்தப்படும்" என்று கூறினார். இதனிடையே பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள குத்துச்சணடை வீராங்கனை நிகத் ஜரீனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
இதையும் படிங்க : "ஊழல், சனாதன தர்ம வெறுப்பே இந்தியா கூட்டணி கட்சிகளிடையே உள்ள ஒற்றுமை" - அண்ணாமலை!