தெலங்கானா: மழை வெள்ளத்தில் பேருந்து அடித்துச் செல்லப்பட்ட காணொலி இணையத்தில் வைரலாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜண்ண சிறிசில்லா மாவட்டம், கம்பீரவுப்பேட்டை - லிங்கண்ணப்பேட்டை இடையே தெலங்கானா மாநில டி.எஸ்.ஆர்.டி.சி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் போல நேற்று (ஆகஸ்ட் 30) மாலை பேருந்து மன்னேறு ஆற்று கால்வாய் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தது.
ஓட்டுநர் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. கடந்த சில தினங்களாகவே மாநிலத்தில் மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினரும், அலுவலர்களும் பேருந்தில் இருந்த 25 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடந்து அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால், பேருந்தை கரைக்கு இழுக்க முடியாததால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது குறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.