கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பீகார் பயணத்தின்போது ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவை சந்தித்து பேசினார். அப்போது, இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதாகவும், உடல் எடையை குறைக்கும்படி தேஜஸ்விக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பிரதமரின் அறிவுரையை பின்பற்றி, தனது உடல் எடையை குறைப்பதில் தேஜஸ்வி கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தேஜஸ்வி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், உடற்பயிற்சி செய்வது போன்ற மற்றொரு வீடியோவை தேஜஸ்வி பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தை லாலு பிரசாத் யாதவின் பழைய ஜீப்பை கைகளால் இழுத்தும் தள்ளியும் உடற்பயிற்சி செய்கிறார். தேஜஸ்வி யாதவ், திருமணத்திற்கு பிறகு எடை கூடிவிட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "திருமணத்திற்கு முன்பு அவரது உடல் எடை 75 கிலோவாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு பத்து கிலோ அதிகரித்து, 85 கிலோவைத் தாண்டிவிட்டது. அவர் ஒரு உணவுப் பிரியர். அசைவ உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்.
க்ரில்டு சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடுவார். சாக்லேட் ஷேக்குகளும் அவருக்கு பிடிக்கும். ஆனால், பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகு, அவர் தனது உணவுப் பழக்கத்தை மாற்றியுள்ளார். எண்ணெய் உணவுகள், இனிப்புகளைத் தவிர்த்து, சாலட் மற்றும் மசாலா பொருட்கள் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுகிறார்.
கொழுப்புச் சத்துள்ள அனைத்து உணவுகளையும் தவிர்த்து வருகிறார். உடல் எடையை குறைக்க தேஜஸ்வியின் மனைவியும் ஊக்குவித்தார். இப்போது தேஜஸ்வி உடல் எடையை குறைப்பதில் முனைப்புடன் இருக்கிறார். அதற்காக அவர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். அவர் கிரிக்கெட் வீரராக இருந்ததால் உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். இன்னும் சில மாதங்களில் அவர் உடல் எடையை குறைத்துவிடுவார். விரைவில் நீங்கள் வித்தியாசமான தேஜஸ்வியைப் பார்ப்பீர்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க:டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்... ராகுல் காந்தி கைது...