பாட்னா: பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் உதவி கேட்ட மாணவனிடம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜ் பிரதாப் சிங்குக்கு சரியான பதிலடி கிடைத்துள்ளது. சென்ற செவ்வாய் கிழமை(மே 17) அன்று பிகாரை சேர்ந்த அந்த மாணவனிடம் தேஜ் பிரதாப் சிங் வீடியோ காலில் பேசினார். இந்த காலில் பேசிய போது தேஜ்ஜின் கேள்விகளுக்கு அந்த மாணவன் பளீரென்று பதிலளித்தான். இந்த வீடியோ கால் காணொளி தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
முன்னதாக முதல்வர் நிதிஷ் குமார், நாளந்தா மாவட்டத்தின் ஹர்நாட் பிளாக்கில் உள்ள தனது சொந்த கிராமமான கல்யாண்பிகாவுக்குச் சென்றிருந்தபோது, அக்கிராமத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் சோனு முதலமைச்சரிடம், ''ஐயா, ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள். எனது படிப்பில் எனக்கு ஆதரவளிக்க எனது பாதுகாவலர் உதவ விரும்பவில்லை. தயவு செய்து என்னை தனியார் பள்ளியில் சேர்த்து விடுங்கள். அரசு நடத்தும் பள்ளியின் கல்வித் தரம் ஏற்றதாக இல்லை’’ என்றார்.
அம்மாணவனின் துணிச்சலான நடவடிக்கையால் ஒரு கணம் வியந்த நிதிஷ், உடனடியாக தன்னுடன் வந்த அதிகாரி ஒருவரிடம் சிறுவனின் படிப்புக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறினார். சோனு பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநில அரசு தனது படிப்பிற்கு உதவினால், தானும் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியாக முடியும்.
பின்னர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, நிதிஷ் குமாரின் அரசியல் போட்டியாளரான தேஜ் பிரதாப் சிங், நிதிஷ் குமாரை டேமேஜ் செய்யும் நோக்கில் அம்மாணவனை அணுகினார், இருப்பினும் மாணவன் அவருக்கு சரியான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். அம்மாணவனிடம் பேசிய தேஜ், ‘ நான் உங்களுடைய ஃபேன், நீங்கள் நிச்சயமாக எங்கள் ஆட்சி அமைந்ததும் அனைத்து வசதிகளையும் பெறுவீர்கள் என்றார்.
பின்னர் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, அம்மாணவன் தான் ஐபிஎஸ்,ஐஏஎஸ் போன்ற அதிகாரியாக ஆக விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த தேஜ் எங்களது ஆட்சி வந்ததும் உங்களுக்கு உதவி வழங்குவோம் எனவும், எங்களுக்கு கீழ் நீங்கள் பணிபுரிவீர்கள் என்று கூறினார். இதற்கு அந்த மாணவன் நான் யாருக்கு கீழும் வேலை பார்க்க விரும்பவில்லை என கூறியதையடுத்து தேஜ் உடனடியாக அழைப்பை நிறுத்தி விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை - பின்னணி என்ன ?