தேஸ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தி கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பெற்ற வெற்றியிலிருந்து இளைஞர்கள் உத்வேகம் அடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதே மனநிலையை கொண்டு மக்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பெருந்தொற்று தொடக்க காலத்தில் போதுமான வளங்கள் இல்லாத நிலையில் எப்படி எதிர்கொள்ள போகிறோம் என மக்களுக்கு அச்சப்பட்டார்கள்.
ஆனால், மக்கள் மனத்திடத்தை வெளிப்படுத்தினர். பிரச்னை பெரிதாக மாறுவதற்கு முன்பே, விரைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்சார்பு திட்டத்தின் மூலம் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தினோம். மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தினோம்.
ஆகஸ்ட் மாதம், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆக போகிறது. தற்போது, தற்சார்பு இந்தியாவுக்காக வாழ வேண்டும். இந்தாண்டு முதல் சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் வரையிலான காலம், இளைஞர்களின் பொற்காலமாகும். மன மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாக பல சவால்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியை எடுத்து கொள்ள வேண்டும். முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்தோம்.
இருப்பினும், சவால்மிக்க சூழலில் போராடி தொடரை வென்றோம். குறைவான அனுபவம் இருந்தாலும் நம்பிக்கையில் உச்சத்தை தொட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கேட் வெற்றி வாழ்க்கைக்கான பாடமாகும். நம் மனநிலை நேர்மறையாக இருக்க வேண்டும்" என்றார்.