புதுச்சேரி மாநிலத்தில் கரோனா ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்றுமுதல் (டிசம்பர் 6) புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்புமுதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பை ஒட்டி அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை வரவேற்க பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் புதுச்சேரி சாரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்க முடிவெடுத்தனர்.
அந்தவகையில் ஆளுயர யானை பொம்மை மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவருவது போலவும், பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவருக்கு பலூன்கள், பொம்மைகள், இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக வரவேற்பளித்தனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு சானிடைசர் கொடுத்தும் முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக பள்ளியில் அமரவைத்தனர்.
இதேபோல் லாஸ்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் வகையில் மேளதாளம் வாத்தியம் முழங்க பள்ளிக்கு உள்ளே நுழையும் மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், முகக்கவசம் வழங்கியும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
அரசுப் பள்ளியில் ஆசிரியர்களின் இந்த ஏற்பாடுகளைப் பார்த்த மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து பொம்மைகளும் நடனமாடியபடி வந்து தங்கள் வகுப்புகளில் அமர்ந்து பாடங்களை கவனித்தனர்.
இதையும் படிங்க: 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை