ஆந்திரப் பிரதேசம்: தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகியான பொல்நடி சேஷகிரி ராவின் மீது ஒரு கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று(நவ.17) காலை சரியாக ஆறு மணியளவில், காக்கிநாடாவிலுள்ள சேஷகிரி ராவின் இல்லத்திற்கு சாமியார் வேடம் அணிந்தபடி ஒருவர் வந்துள்ளார்.
சேஷகிரியிடம் பிச்சை கேட்பது போல் கேட்க, சேஷகிரியும் தன் வீட்டிலிருந்து அரிசியை எடுத்து வந்துள்ளார். எடுத்து வந்த அரிசியை அந்தச் சாமியாரின் வேஷ்டியில் சேஷகிரி ராவ் கொட்டிக் கொண்டிருந்த போது, திடீரென அரிவாளை எடுத்த அந்த சாமியார் வேடமிட்டிருந்த நபர் சேஷகிரி மேல் கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்றார்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த சேஷகிரி ராவ், பின்னோக்கி பயந்து சென்றுள்ளார். அப்போது லேசான தாக்குதலை மட்டும் செய்துவிட்ட அந்த சாமியார் வேடமிட்ட நபர் தப்பித்து ஓடிவிட்டார். இந்தத் தாக்குதல்களில் காயமடைந்துள்ள சேஷகிரியை அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்துள்ள சேஷகிரி ராவை அவரது கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. சேஷகிரி ராவ் இதற்கு முன்பு மக்களவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.