டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நூறு விழுக்காடு பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் 50 விழுக்காடு பங்குகளை விற்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வந்தது.
குறைந்தபட்ச விலையாக 15 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடிவரை அரசு விலையை தீர்மானித்திருந்த நிலையில், டாட்டா குழுமம், ஸ்பைஸ்ஜெட்டும் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்திருந்தனர்.
இந்தச்சூழ்நிலையில், டாடா நிறுவனம் ஒப்பந்தத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் 1953 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டது. தற்போது, ஏலத்தில் டாடா வென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் ஏர் இந்தியா டாடாவிடம் செல்லவிருக்கிறது.
ஒப்பந்தத்தின் வெற்றியாளர் குறித்த முடிவு அக்டோபர் 15ஆம் தேதி அரசு வெளியிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தத்தின் 85 விழுக்காடு தொகை கடனை அடைக்கவும், மீதமுள்ள 15 விழுக்காடு தொகை அரசுக்கு பணமாகவும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியதாக வெளியான தகவலை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் குழுமத்தின் கொள்கைகளுக்கு அங்கீகாரம் - ரத்தன் டாடா