புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில் முக்கிய திருப்பமாக அம்மாநில துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் உறுப்பினர் ஜான் குமார் ராஜினமா செய்தார். இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 28ஆக உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் எண்ணிக்கை 14ஆகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 14ஆகவும் உள்ளது.
நெருக்கடியில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் துணை நிலை ஆளுநர் மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரைக்காக புதுவை வருகிறார் மோடி!