டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதியதாக 43 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.
அவருக்கு தமிழக பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த தலைவர் நாராயன் ரானே, அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனவால், காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா உள்பட 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த பின்னர், முதல்முறையாக ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சாதித்து காட்டிய எல்.முருகன்
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு தீவிரமாக பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் எல். முருகன். இவரது தலைமையில் நடந்த வேல் யாத்திரைக்கு அப்போதைய ஆளும் அதிமுக அரசு அனுமதி மறுத்த நிலையிலும் வெற்றிகரமாக செயல்படுத்தினார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று சட்டப்பேரவை செல்லும் என அவர் கூறியதை பலரும் கேலி கிண்டல் செய்த நிலையில், தற்போது ஒன்றிய அமைச்சராக பதவியேற்று சாதித்துக் காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வழக்குரைஞர் டூ மத்திய அமைச்சர்- எல். முருகன் வாழ்க்கை பயணம்!