ஆல்ட் நியூஸின் இணை நிறுவனரான முகமது ஜுபைர் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பாஜக வை சேர்ந்த நபர் ஒருவரை விமர்சித்து பதிவிட்டுருந்தார்.
அதில், வட இந்தியாவில் ஒரு சில வலதுசாரி ஆர்வலர்கள் "இந்துப் பெண்ணுக்கு ஒரு முஸ்லீம் மதகுரு போதைப்பொருள் கொடுத்துள்ளார்" என ஒரு வீடியோவை ட்வீட் செய்தனர். ஜுபைர் அதன் உண்மை தன்மையை கண்டுபிடித்து, இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோ என்று கூறி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் ஜுபைரின் ட்விட்டர் பதிவுகள் இந்தியாவின் ஐடி சட்டத்தின் விதிகளை மீறுவதாகக் கூறி, ட்விட்டர் சப்போர்டிற்கு புகார் அளித்துள்ளதாக கூறி, இது ஏன் என்று தெரியவில்லை என குறிப்பது போன்ற எமோஜிகளையும், தான் பெற்ற மெயிலின் புகைப்படத்தையும் ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பெற்ற மெயிலில், “இந்த கோரிக்கையின் விளைவாக தற்போது புகாரளிக்கப்பட்ட பதிவின் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பயனர்களின் கணக்கிலிருந்து பதிவுகளை அகற்ற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து (சட்ட அமலாக்கம் அல்லது அரசு நிறுவனம் போன்றவை) சட்டக் கோரிக்கையைப் பெற்றால், அவர்களுக்கு தெரிவிப்பது எங்கள் கொள்கையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜுபைருக்குப் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில் “உங்களின் பதிவில் கூறப்பட்டிருந்ததற்கு எதிராகவே புகார் கோரிக்கை எழுப்பப்பட்டதே தவிர, உங்களை குறி வைத்து புகார் கோரிக்கை எழுப்படவில்லை. இதுகுறித்து விளக்க அறிக்கை விரைவில் தரப்படும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘தன்னை கொலை செய்ய முயன்றவர்கள் யார் என தெரியும்’ - இம்ரான் கான்