ஹைதராபாத்: கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் கடந்த மே 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், பாஜக 66 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களையும் கைப்பற்றின.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளது. இதற்காக, பெங்களூருவில் உள்ள கண்டிரவா மைதானத்தில் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.
விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னிலையில் சித்தராமையா கர்நாடகவின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சித்தராமையாவிற்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் பங்கேற்ற இந்த கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், இமாச்சல முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் இடம்பெற்றிருந்தார்.
பாஜகவை அனைத்து மாநிலங்களிலும் வெல்வதற்கு திராவிடமாடல் தேவை; அதனை அடைய அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக ஓரணியில் திரளவேண்டும் என்பதே திமுகவின் முக்கிய நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜகா இல்லாத தென்னிந்திய மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என்ற வரிசையில் தற்போது கர்நாடகா மாநிலமும் இணைந்துள்ளது என்பதை திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன.
இதனை வரவேற்கும் விதமாக, சித்தராமையாவின் அழைப்பேசி அழைப்பை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதே நேரத்தில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு உள்ள நட்போ பலம் வாய்ந்தது. அதற்கு உதாரணங்கள் எத்தனையோ இருப்பினும், ஜோடோ யாத்ரா என்ற ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் தொடக்க விழாவில் ராகுல் காந்தியுடன் அவர் நட்பு பாராட்டிய விதமே எடுத்துரைக்கும்.
அதே பாணியில், கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள கர்நாடக காங்கிரஸுடனும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவோடு கைக்கோர்த்துள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளார். நிகழ்ச்சி மேடையில், அவர் கர்நாடாக முதலமைச்சர் சித்தராமையாவினுடன் கைக்கோர்த்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட விதம் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸார் மத்தியில் ஸ்டாலின் நமது தலைவர் என்ற உணர்வை மேலோங்க செய்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, அவர் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாருடன் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்த விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சித்தராமையா, டி.கே சிவக்குமார் ஆகிய இரண்டு காங்கிரஸ் தலைவர்களிடமும் அவர் அன்பாக வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டார்.
இந்த விதமானது கர்நாடகவில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட்டு கொண்டு இருந்த இரு தலைவர்களுள் ஒருவரான டி.கே.சிவக்குமாரை கட்டிப் பிடித்து முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தமைக்கு பாராட்டுதல் தெரிவிக்கும் விதமாகவும், மற்றொரு புகைப்படத்தில் தன்னைப் போன்ற சக முதலமைச்சரான சித்தராமையாவை அதே மாண்புடன் அணுகியதை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பாஜகவை திராவிட நிலப்பரப்பில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டதாகவும், வரும் 2024 பொதுத்தேர்தலில் அக்கட்சியை வெல்வதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி, இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Karnataka CM : சித்தராமையா எனும் நான்.... கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்!