லக்னோ: பாரதிய ஜனதா கட்சியின் அயோத்தி மாவட்ட ஊடக பொறுப்பாளர் டாக்டர். ரஜீனீஷ் சிங் தரப்பில் வழக்குரைஞர் ருத்ர விக்ரம் சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை மே8ஆம் தேதி அளித்தார்.
அந்த மனுவில், “தாஜ்மஹாலில் 22 அறைகள் (Taj Mahal 22 doors case) நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளன. அந்த அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தாஜ்மஹாலும் பழங்காலத்தில் சிவன் கோயில் ஆக இருந்ததாக நம்பப்படுகிறது. இது தாஜ்மஹால் அல்ல, தேஜோ மஹாலயா என்ற இந்துக் கோவில்” என்றார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில் இந்த மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று (மே12) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளை நீதித்துறை நடவடிக்கைகளில் முடிவு செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வு தாஜ்மஹால் தொடர்பான பணி என்பதால், நீதித்துறை நடவடிக்கைகளில் இதை உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாஜ்மஹாலைப் பற்றி நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையைக் கண்டறிய நீதிமன்றம் ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறினார். "தயவுசெய்து அந்த அறைகளுக்குச் சென்று ஆய்வு செய்ய என்னை அனுமதிக்கவும்", என்று அவர் கெஞ்சினார்.
அப்போது, “வரலாற்றுச் சின்னத்தை யார் கட்டினார்கள் என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, “தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப்படவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இதைப் போன்று நாங்களும் நடந்துகொள்ள வேண்டுமா? நீங்கள் நம்பும் வரலாற்று உண்மைகளுக்கு எங்களை அழைத்துச் செல்லாதீர்கள்” என்று தெரிவித்தனர்.
இந்த விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, இதைப் பொதுநல மனுவாக தாக்கல் செய்யாதது குறித்து கேள்விகளை எழுப்பினார். அதேநேரம், அரசியல் சாசனத்தின் 226ஆவது பிரிவின் கீழ் இந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு உயர்நீதிமன்றம் எப்படி முடிவு எடுக்க முடியும் என்றும் விவாதத்தின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்டது.
இந்த நிலையில், மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்ததையடுத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ருத்ர விக்ரம் சிங், "இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம். உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன், வரலாற்றுத் துறை மற்றும் தொல்லியல் துறையை அணுகுவோம்” என்றார்.
இதையும் படிங்க: தாஜ்மஹால் இந்து கோயிலா? 22 அறைகளை திறக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு!