ஹைதராபாத்(தெலங்கானா): தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் ஹைதராபாத்தில் போராட்டங்களைத் தூண்டுமாறு சர்ச்சையாகப்பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இருப்பினும் இன்று (ஆகஸ்ட் 25) மீண்டும் காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக ஏஐஎம்ஐஎம் (அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்)தலைவர் அசாதுதீன் ஓவைசி அவரது ட்விட்டரில் இந்த கைது நடவடிக்கை பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சின் நேரடி விளைவு எனப்பதிவிட்டார். நேற்று ஷா அலி பண்டா பகுதியில் இருந்து வன்முறையில் ஈடுபட்டதாக 90 பேரை போலீஸார் அழைத்துச் சென்றதாகவும், ஓவைசி கூறியதற்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் ஓவைசி ட்விட்டரில் தெரிவித்தார்.
இதுகுறித்து ஓவைசி "இந்த பதற்றமான நிலைமை ராஜா சிங்கின் வெறுப்புப் பேச்சின் நேரடி விளைவு. அமைதியை நிலைநாட்ட அவர் விரைவில் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். ஹைதராபாத் எங்கள் வீடு, அது வகுப்புவாதத்திற்கு இரையாகிவிடக் கூடாது" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ஒரு வீடியோவில், இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக்கூறி ஆகஸ்ட் 23அன்று கைது செய்யப்பட்டார். ராஜா சிங்கின் பேச்சின் எதிராக நகரின் சில முக்கியமான பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. ராஜா சிங் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நீதிமன்றத்தால் ராஜா சிங் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ஹைதராபாத்தின் சில பகுதிகளில் நேற்று மதியம் வரை போராட்டங்கள் நடந்தன. ஓவைசி மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘ஷா அலி பண்டா & ஆஷா டாக்கீஸ் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட 90 இளைஞர்கள் தென் பகுதி DCPயிடம் எனது பரிந்துரைத்தலுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் AIMIM எம்எல்ஏ அகமது பின் அப்துல்லா பலாலா பதற்றமான சூழ்நிலையை சரிபடுத்த இரவு முழுவதும் முயற்சி செய்து வருகின்றனர். நான் அவர்களுடன் தொடர்பில் இருந்தேன்’ எனத் தெரிவித்தார்.
இந்த பதற்றமான சூழ்நிலையில் காவல்துறையினர் திடீரென ஐந்து பேரின் வீட்டுக்குள் நுழைந்து, அவர்களை அத்துமீறி கைது செய்ததாகவும் ஓவைசி குற்றம்சாட்டினார். ராஜா சிங் அவரது சர்ச்சை பேச்சால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாக அதன் தலைமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அவரின் வன்முறையைத்தூண்டும் பேச்சால் ஹைதராபாத்தில் அமைதி நிலவாமல் உள்ளது என பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பாஜக எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராகப்போராட்டம்.. ஹைதராபாத்தில் ஊரடங்கு சட்டம் அமல்..