லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் இறப்புக்குப் பின் அவருக்கான மாநிலங்களவை எம்பி பதவி காலியாக உள்ளது. இதற்கான இடைத்தேர்தல் வருகின்ற 14ஆம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், பிகாரில் காலியாக இருக்கும் மாநிலங்களவை எம்பி பதவிக்கான இடைத்தேர்தலில், முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடியை களமிறக்க பாஜக முடிவுசெய்தது. அதன்படி பிகாரில் டிசம்பர் 14ஆம் தேதி நடக்கும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக சார்பில் சுஷில் குமார் மோடியின் பெயரை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பிகார் மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தலுக்காகப் போட்டியிடும் சுஷில் குமார் மோடி இன்று (டிச. 02) வேட்புமனு தாக்கல்செய்கிறார்.
இந்த நிகழ்வில், சுஷில் மோடியுடன் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், துணை முதலமைச்சர்கள் தார்கிஷோர் பிரசாத், ரேணு தேவி, பிற அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். மாநிலங்களவை எம்பி தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு அசாதுதீன், லோக் ஜனசக்தி ஆதரவு அளித்தால், மாநிலங்களவை இடைத்தேர்தல் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பாபா ராம்தேவ் ஆதரவு!