டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் டீஸ்டா செடல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையுமாறும் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து டீஸ்டா செடல்வாட் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதில் இருந்து ஒரு வார காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனு மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும் இன்று (ஜூலை 5) உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, திபாங்கர் தத்தா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
செடல்வாட்டை உடனடியாக சரணடையுமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, சமூக ஆர்வலர்களுக்கும் சிறிது அவகாசம் அளித்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது.
இதையும் படிங்க: BJP functionary Arrested: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!
குஜராத் நீதிமன்ற தனி நீதிபதி, ஒரு வாரம் கூட இடைக்கால பாதுகாப்பு வழங்காதது முற்றிலும் தவறு என்று உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியது. உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கும்போது, அதை ஒரு வாரத்திற்கு நீட்டிப்பது சிறந்ததாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் வழக்கறிஞர் குஜராத் கலவரச் சம்பவம் சாதாரண வழக்கு அல்ல என்று கூறினார். 10 மாதங்கள் ஜாமீனில் இருக்கும் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க என்ன அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மனுதாரரின் நடத்தை ஆட்சேபனைக்குரியதாக இருக்கலாம், ஆனால் ஒரு நபரின் சுதந்திரத்தை எப்படி பறிக்க முடியும் என்றுயோசித்து வருவதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குஜராத் கலவரம்: 2002ம் ஆண்டு நடந்த குஜராத்-கோத்ரா ரயில் சம்பவம் பெரும் அளவு கலவரத்தை உருவாக்கியது. இந்த கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்டப் பலர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக விசாரணை தொடங்கிய போது விசாரணையில் அப்போதைய குஜராத் முதலமைச்சரும், தற்போதைய பிரதமரும் ஆன நரேந்திர மோடி மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை உருவாக்கியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீ குமார், சஞ்சீவ் பட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை கடந்த ஆண்டு 2022 உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இதனை எதிர்த்து டீஸ்டா செடல்வாட் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காரணமாக போலீஸ் மற்றும் நீதிமன்றக் காவல் முடிந்ததுமே டீஸ்டா விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: குஜராத் கலவரம்: டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய தடை... இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!