டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவை மத்திய அரசு நீக்கி ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு பொது நல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரிக்கத் துவங்கியது. 16 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு மூன்று விதமான தீர்ப்புகளை அரசியல் சாசன அமர்வு நீதிமன்றம் வழங்கியது. இதில் நீதிபதிகள் சந்திர சூட், கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றொரு தீர்ப்பை வழங்கி உள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புகளிலும் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த வழக்கில் மூன்று விதமான தீர்ப்புகள் தெரிவித்திருந்தாலும் அதனை ஒரே தீர்ப்பாகத் தான் கருத வேண்டும் எனத் தெரிவித்தார். பின்னர் தீர்ப்பை வாசித்த அவர், இந்த சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதா என்பது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார். மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதற்கு மனுதாரர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அதுகுறித்து தனியாகத் தீர்ப்பளிக்கத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கும், மாநிலத்தில் நிலவிய போர்ச்சூழல் காரணமாகவும் செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடு தான் சட்டப்பிரிவு 370. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது மாநிலங்களில் மத்திய அரசு எடுக்கும் முடிவைக் கேள்வி கேட்க முடியாது.
அவசரச் சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. இதனால் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருகிறோம். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று தான் ஜம்மு காஷ்மீர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்ட இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை.
சட்டமன்றத்தின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும் எனத் தெரிவித்தார். மேலும், மாநிலங்கள் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோருவது குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை இருப்பதாகத் தெரிவித்த அவர், லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும் எனத் தெரிவித்தார்.
காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தீர்ப்புக்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சரும் பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, முன்னாள் முதலமைச்சரும் கே&கே என்சி கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டிச் சிறையில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
-
BJP President JP Nadda says, "Bharatiya Janata Party welcomes the decision given by the Supreme Court on Article 370..." pic.twitter.com/VIUQy2wYTl
— ANI (@ANI) December 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BJP President JP Nadda says, "Bharatiya Janata Party welcomes the decision given by the Supreme Court on Article 370..." pic.twitter.com/VIUQy2wYTl
— ANI (@ANI) December 11, 2023BJP President JP Nadda says, "Bharatiya Janata Party welcomes the decision given by the Supreme Court on Article 370..." pic.twitter.com/VIUQy2wYTl
— ANI (@ANI) December 11, 2023
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநிலத்தின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது எனப்பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தனது வரவேற்பைத் தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருவள்ளுவர் ஞானம், அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து பெருமிதம்!