டெல்லி: இயக்குநர் லீனா மணிமேகலையின் குறும்படமான காளி பட போஸ்டரில், காளி புகைபிடிப்பது போல் இருந்தது சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இதைத் தொடர்ந்து காளி பட போஸ்டர் மதஉணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாகக் கூறி லீனா மணிமேகலை மீது உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், புகார் அளிக்கப்பட்டு வழக்குகள் என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் நேரில் ஆஜராக லீனா மணிமேகலைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு எதிராக இயக்குநர் லீனா மணிமேகலை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துருந்தார். அதில் இந்த வழக்குகளால் கைது செய்யப்படக் கூடும் என்றும், தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தன் மீதான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, லீனா மணிமேகலை மனுதொடர்பாக பதிலளிக்க டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கைது செய்ய இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் : ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்