டெல்லி : மத்திய அரசு கொண்டு வந்து உள்ள டெல்லி அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. அதேநேரம், அவசரச் சட்ட விவகாரத்தில் டெல்லி அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரிகளை நியமனம் மற்றும் பணி மாற்றம் குறித்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று கூறி தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகும் வகையில் இருப்பதாக கூறிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அவசர சட்டத்திற்கு எதிராக அனைத்து மாநில எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டினார். தொடர்ந்து மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வு விசாரித்தது. டெல்லி அரசு தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி, தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தில் இரண்டு அதிகாரிகளுக்கு மத்தியில் சிறுபான்மையினராக முதலமைச்சர் அமர்வதை கற்பனை செய்து பார்க்குமாறும் இரண்டு அதிகாரிகளும் முதலமைச்சரை விட வாக்களிப்பார்கள் என்றும் கூறினார். மேலும் இதில் யார் சிறந்த முதலமைச்சர் என்றும் சிங்வி கேள்வி எழுப்பினார்.
வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரிக்க உள்ளதாகவும், இடைக்க கால தடை விதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தனர். டெல்லி அரசின் மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு தரப்பில் துணை நிலை அளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க : கரோனாவை கண்டறிய 5 நிமிடம் போதுமா? அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் விந்தை கண்டிபிடிப்பு!