டெல்லி: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் 2019ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது, 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல் கட்டுமானப் பணிகள் எதுவும் துவங்கப்படாததால், பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் பி.கே.மிஷ்ரா, மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் ஸ்ரீதருண் பாலாஜி, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி தாமதமாவது தொடர்பாக கே.கே.ரமேஷ் உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் (Sanjay Kishan Kaul) அமர்வு விசாரித்தது. அப்போது, அடிக்கல் நாட்டப்பட்டதில் இருந்து எய்ம்ஸ் கட்டுமானப்பணி துவங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒன்பது மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் தொடங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு, பல மாநிலங்களிலும் இதேபோல பிரச்னை இருப்பதால் மனுதாரர் இதனை நிர்வாக ரீதியில் அணுக வேண்டும் என தெரிவித்தது, எய்ம்ஸ் கட்டுமான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தது.
மேலும், தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு நன்றாக உள்ளது என அறிவேன் எனத் தெரிவித்த நீதிபதி, இது போன்ற விவகாரங்களை நிர்வாக ரீதியில்தான் அணுக வேண்டும் என தெரிவித்து, வழக்கு விசாரணையையும் முடித்து வைத்தது. மேலும், இந்த விவகாரத்தைப் பொறுத்தளவில், நிர்வாகத்திற்கு மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை அடங்கிய கடிதத்தையோ அல்லது அவர்கள் நேரடியாகச் சென்றோ முறையிட மனுதாரர்கள் தரப்பிற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!