டெல்லி: ஒன்றிய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கைகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில் கோவின் தளத்தை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
அதில், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும் என்று கூறுகிறீர்கள். அதில் கிராம மக்கள் எவ்வாறு பதிவு செய்வார்கள் என்று விளக்கமளிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளது.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "கள நிலவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் திட்டங்களை வகுக்கக் கூடாது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி கிடைத்துவிட்டதா" என்று கேள்வியெழுப்பி ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், "தனியார் மருத்துவமனி மூலம் வழங்கப்படும் தடுப்பூசியை கண்காணிக்க என்ன திட்டம் வகுக்கப்பட்டது. தடுப்பூசி திட்டத்திற்காக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடி எப்படி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து 18 முதல் 44 வயதுள்ளவர்களுக்கு ஏன் தடுப்பூசி இலவசமாக வழங்கவில்லை?" என்று ஒன்றிய அரசிடம் வினவியுள்ளது.
மேலும், தடுப்பூசி ஆய்வுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கியுள்ள போது, மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலையை, அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும் ஒன்றிய அரசிடம் நேரடியாக உச்ச நீதிமன்றம் கேள்விகளை முன்வைத்துள்ளது.
முடிவில், மூன்றாவது அலை வரும் என்று கூறும் ஒன்றிய அரசு, அதற்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றும் கோரியுள்ளனர்.