டெல்லி: பட்டியலின, பழங்குடியினரை இழிவுபடுத்தியதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பின்னர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில், ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவு
இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி, ஆர். எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, வழக்கை ரத்து செய்யமுடியாது எனவும், விரைவில் இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மனுதாரர் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் கருத்து சொல்லவில்லை. அவருக்கு அப்படியான எண்ணமும் கிடையாது.
அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உயர் நீதிமன்றம் கருத்தில்கொள்ளவில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேல்முறையீட்டின் தீர்ப்பு
இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பட்டியலினத்தவர் குறித்து தரக்குறைவாக அவர் பேசவில்லை எனவும், ஆனால், அவர் அந்த வார்த்தைப் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாம் எனவும் கூறி, அவர் மீதான குற்றவழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர் ராஜகோபாலன் ஆர்.எஸ். பாரதியின் உறவினர்' - பரவி வரும் செய்தி குறித்து புகார்