இந்திய நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டம் ஏறத்தாழ நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது. நாட்டின் வரலாற்று சின்னங்களுள் ஒன்றாக அறியப்படும் இக்கட்டத்தினை இடிக்காமல் அதன் அருகே நாடாளுமன்ற புதிய கட்டடம் கட்ட நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
முக்கோண வடிவில் கட்டப்பட்டுவரும் இக்கட்டத்தின் திட்டப் பணிகள் மதிப்பு ரூ.889 கோடியாகும். இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெள்ளிக்கிழமை (ஜன.5) தள்ளிவைத்தது.
இந்நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஏ.எம். ஹன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்ஜிவ் கன்னா ஆகியோர் வாசித்தனர். அதில் நீதிபதிகள் ஏ.எம். ஹன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் புதிய கட்டடத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். நீதிபதி சஞ்ஜிவ் கன்னா தனி தீர்ப்பை வாசித்தார்.
ஆக அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் மத்திய விஸ்டா திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், 900 முதல் 1,200 எம்.பி.க்கள் வரை அமரலாம். இந்தக் கட்டடம் 2022 ஆகஸ்ட் மாதத்துக்குள் கட்டப்பட உள்ளது, அப்போது நாடு தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் என்பது நினைவுக் கூரத்தக்கது.