டெல்லி: புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாமல் உள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சங்கர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏழு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனு மீதான விசாரணை கடந்த 20ஆம் தேதி நடைபெற்றபோது, மூன்று முறைக்கு மேல் அவகாசம் அளித்த பின்பும் ஏன் இன்னும் தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது என நீதிபதி கோபமாகக் கேட்டார். அப்போது, கரோனா சூழல் காரணமாக தங்களால் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருப்பதாகக் கூறிய தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த தங்களுக்கு ஏழு மாதம்கூட தேவையில்லை நான்கு மாத காலம் அவகாசம் போதும் எனத் தெரிவித்தது.
தேர்தலை உடனடியாக நடத்தக்கோரிய சங்கரும், தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்குவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்தார். இதனை இரண்டு நாள்களுக்குள் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு நான்கு மாத கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்