ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் மத்னூரில் உள்ள மாடல் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தெலுங்கு ஆசிரியை வகுப்பெடுத்தார். இந்த வகுப்பை புகைப்படம் எடுத்த மாணவி ஒருவர் தனது சமூக வலைதள பக்கங்களில் சலிப்பான வகுப்பு என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மறுநாள் அறிந்து கொண்ட தெலுங்கு ஆசிரியை அந்த மாணவியை அழைத்து வகுப்பறைக்குள் செல்போனை கொண்டு வந்தது மட்டுமின்றி, புகைப்படம் எடுத்ததற்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் மாணவியும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆசிரியை மாணவியை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தையும் சில மாணவர்கள் ஸ்மார்ட்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானது. இதனிடையே மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்யக்கோரி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் ஆசிரியை மீது மத்னூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் பாரபட்சமானது - திமுக மனு