கிரிதி: ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி நகரைச் சேர்ந்த சுனில் சோரன் என்பவரது முதல் மனைவி ஷைலீன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் நான்கு மகன்கள் இருந்தனர். இதனிடையே சுனில் சோரன், கடந்த ஏப்ரல் மாதம் சுனிதா ஹன்ஸ்தா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சுனிதாவுக்கு, ஷைலீனின் மகன்களைப் பிடிக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று(நவ.24) கோழிக்கறி குழம்பு வைத்த சுனிதா, அதில் விஷம் கலந்து வளர்ப்பு மகன்கள் மூவருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அதில், அனில் (3), சங்கர் (8) இருவரும் உணவை சாப்பிட்ட நிலையில், விஜய் (12) சாப்பிடவில்லை என தெரிகிறது. விஷம் கலந்த உணவை சாப்பிட்ட இருவரும் வாயில் நுரை தள்ளி கீழே விழுந்தனர். இதைக் கண்டு அச்சமடைந்த சுனிதா அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு வந்த சுனிலின் மூத்த மகன் சோனு, தனது உறவினரை அழைத்து வந்தான். அவர்கள் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, சிறுவன் அனில் உயிரிழந்துவிட்டான். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சங்கரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுவன் அனில் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சுனிதாவை கைது செய்தனர். புதன்கிழமையே விஷம் வாங்கியதாகவும், திட்டமிட்டு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்ததாகவும் சுனிதா ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கணவரை கொல்ல கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்ட மனைவி!