மசூலிப்பட்டினம்: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் சல்லப்பள்ளி என்ற பகுதியில், கடந்த மாதம் 28ஆம் தேதி, பூட்டிய வீட்டில் நடந்த திருட்டுச்சம்பவம் தொடர்பாக சூர்யா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
திருடுவதையே தொழிலாகக் கொண்ட இவர், கடந்த 20 நாட்களில், குடிவாடா, ஜங்காரெட்டிகுடம், கொவ்வூர், ராஜாநகரம், கம்மம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் திருடியுள்ளார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சூர்யாவுக்கு விநோதமான பழக்கம் ஒன்று உள்ளது. குடும்பம் என யாரும் இல்லாத இவர் மயானங்களில்தான் தங்குகிறார். மயானங்களில் தங்கி, பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கிறார். பிறகு கொள்ளையடித்த பொருட்களை மயானத்தில் கொண்டுவந்து புதைத்து வைக்கிறார்.
செல்போன் போன்ற எந்தவித மின்னணு சாதனங்களையும் பயன்படுத்துவதில்லை. திருடும்போது கையுறை அணிந்து, சிசிடிவி கேமராக்களின் இணைப்புகளை அகற்றுகிறார். இவர் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், சுமார் 121 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவந்தது.
இவரிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், இருசக்கர வாகனம், 20 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தங்கம் கடத்த உதவிய இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் இருவர் கைது!