உலகப் புகழ் பெற்ற "புக்கர் பரிசு வென்ற" இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "தோழர்களுடன் ஒரு பயணம் (Walking with the Comrades)" என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாட திட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முதுநிலை ஆங்கிலம் படிப்பிற்கான மூன்றாவது பருவத்தில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி இந்த புத்தகம் நக்சல்களை உயர்வாக சித்தரிப்பதாகவும், தேச விரோத கருத்துக்களை பிரதிபலிப்பதாகவும் கூறி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை சந்தித்து இந்த புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனையடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாடத்திட்டத்தை நீக்கியதாக அறியமுடிகிறது.
இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அருந்ததி ராய், "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ஏ.பி.வி.பி அமைப்பின் அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் காரணமாக 'தோழர்களுடன் ஒரு பயணம்' என்ற எனது கட்டுரை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்.
இது எனக்கு விந்தையாக மட்டுமே இருக்கிறது. நான் ஒருபோதும் சோகமாக உணரவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் அது பாடத்திட்டத்தில் இருப்பதையே நான் இப்போது தான் அறிந்துக்கொண்டேன். எனக்கு இதுவரை இந்த தகவலே தெரியாது. எனது எழுத்து பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது இப்போது பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டதில் நான் அதிர்ச்சியோ அல்லது ஆச்சரியமோ கொள்ளவில்லை.
இத்தகைய எழுத்துகளை ஒரு எழுத்தாளராக எழுதுவது எனது கடமை. பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அதனை தக்க வைப்பதற்காக போராடுவது எனது கடமை அல்ல. அது கற்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடுவது பிறர் செய்ய வேண்டியது. இந்த விவகாரத்தை எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும், எனக்கு மகிழ்ச்சி தான். எனது எழுத்து பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது.
தடைகளும், தணிக்கைகளும் எழுத்தாளர்களை ஒருபோதும் பாதிக்காது. தற்போதைய ஆட்சியாளர்களால் காட்டப்படும் இலக்கியத்தின் மீதான இந்த குறுகிய, ஆழமற்ற, பாதுகாப்பற்ற அணுகுமுறை அதன் விமர்சகர்களுக்கு மட்டும் தீங்கு விளைவிப்பதில்லை. அது மில்லியன் கணக்கான ஆதரவாளர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்" என்றார்.