டெல்லி: அரசு வேலையை கனவாக கொண்டு பலர் அதற்காக நித்தம் படித்து வருகின்றனர். அதற்கேற்ற வகையில் ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடப்பாண்டுக்கான ஆண்டு திட்ட அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அது அரசுப் பணிக்காக தயாராகி வரும் பல்வேறு தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
எண்ணிக்கை குறைவு மற்றும் பல்வேறு பணியிடங்கள் குறித்து ஆண்டு திட்ட அறிக்கையில் குறிப்பிடாதது, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவோரை ஊக்கமிழக்கச்செய்வதுபோல் அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், 10 மற்றும் +2 படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022 அறிக்கையை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. பல்வேறு மத்திய அரசுத்துறைகளில் ஏறத்தாழ 4 ஆயிரத்து 500 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 18 - 27 வயதுடையவர்கள் தேர்வெழுத தகுதி பெற்றவர்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவத்தினர், எஸ்.சி. எஸ்.டி, வகுப்பினர் உள்ளிட்டோர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணமில்லை என்றும்; மற்றவர்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் எஸ்.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 4ஆம் தேதியுடன் இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பணியை கனவாக கொண்டுள்ள தமிழக இளைஞர்கள் தேர்வை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: டெல்லி இளம்பெண் கொலை: டூவீலரில் இருந்த மற்றொரு பெண் யார்? - பகீர் கிளப்பும் பின்னணி