ஜம்மு- காஷ்மீரின் லாவேபோரா பகுதியில், கடந்தாண்டு டிச.31 மாதம் பாதுகாப்புப் படையினர் மூவரை சுட்டுக்கொன்றனர். பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது. அத்துடன், கொல்லப்பட்டவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க யூனியன் பிரதேச நிர்வாகம் மறுத்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அஜாஸ் மக்பூல் கணாய் (24), ஜுபைர் அஹ்மத் லோன் (22), ஆதர் முஹ்ஸ்தாக் வாணி (16) ஆகிய மூவரும் அப்பாவிகள் என அடையாளம் காணப்பட்டது.
ஒரு பள்ளி மாணவர் உள்ளிட்ட மூன்று அப்பாவிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து போலி என்கவுன்டரில் ராணுவம் படுகொலை செய்திருப்பதாக ஜம்மு-காஷ்மீர் மனித உரிமைகள் ஆர்வலர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த ராணுவ நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலி என்கவுன்டர் குறித்து கடும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
ராணுவத்தின் இந்தப் போலி என்கவுன்டர் நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்தப் போலி என்கவுன்டரில் படுகொலைசெய்யப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி உயிரிழந்த அந்த மூவரின் பெற்றோர் ஸ்ரீநகரில் இன்று (ஜன.14) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடையே பேசிய ஆதர் முஹ்ஸ்தாக் வாணியின் தந்தை முஹ்ஸ்தாக் அஹ்மத் வாணி, “ அவர்கள் (ராணுவம்) என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டார்கள். இப்போது என்னிடம் எதுவும் மிச்சமில்லை. என் மகனை கொன்றது போல என்கவுன்டரில் என்னைக் கொன்றுவிடுங்கள். என் மகனின் பிணத்தைக் கூட ஒரு தரம் காண அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும். எங்கள் மகன் ஒரு நிரபராதி” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
சீக்கிய சமூக ஆர்வலர் அங்கத் சிங் கூறுகையில்,"கொல்லப்பட்டவர்களுக்கு பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பிருந்தால், தயவுசெய்து அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள். நீங்களே நீதிமன்றமாகவும், நீதிபதியாகவும், நியாயத் தராசாகவும் ஆகிவிட்டீர்கள்.
அதனை நாங்கள் ஏற்க முடியாது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளபடி, கொல்லப்பட்டவர்களின் உடல்களை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இறந்த உடல்களை ஒப்படைக்க நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.
போலி என்கவுன்டர் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும். எனவே இது தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையைத் தொடங்கப்பட வேண்டும்"என தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் சோபியான் மாவட்டத்தை அடுத்த அம்ஷிபோராவில் நடந்த போலி என்கவுன்டரில் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முக்கிய தளபதி உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகள் விசாகப்பட்டினத்தில் சரணடைந்தனர்!