சம்பால் (உத்தரபிரதேசம்): தாலிபான்கள் விவகாரத்தில் வெளியிட்ட அறிக்கையில் தேசத்துரோக கருத்துகள் இருந்ததாகக் கூறி சமாஜ்வாதி எம்பி ஷபிக்குர் ரஹ்மான் பார்க் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், “தாலிபான்கள் குறித்து நான் அறிக்கை ஒன்றை பகிர்ந்தேன். அந்த அறிக்கையின் காரணமாக என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நான் ஒரு குற்றவாளி, துரோகி என்று அறிவிக்கப்பட்டுள்ளேன். தற்போது என்ன நடக்கிறது? தோஹாவில் தாலிபான்களுடன் அரசாங்கமே பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள். ஒருகாலத்தில் இந்தியாவும் சுதந்திரத்திற்காக போராடியது” என்றார்.
தொடர்ந்து தன் மீது பாஜக பிரமுகர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். முன்னதாக ஷபிக்குர் ரஹ்மான் பார்க், இந்திய சுதந்திரப் போராட்டத்தை தாலிபான்கள் கிளர்ச்சியுடன் பார்க் ஒப்பிட்டு பேசினார்.
இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது தொடர்பாக சில புகார்களும் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சம்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மிஸ்ரா கூறுகையில், “இந்திய அரசால் தாலிபான்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை புகழ்வதோ, அவர்களை நோக்கி நகர்வதோ துரோகச் செயல்” என்றார்.
ஷபிக்குர் ரஹ்மான் பார்க், 5 முறை எம்பியாகவும், ஒரு முறை எம்எல்ஏ ஆகவும் பொறுப்புவகித்துள்ளார்.
இதையும் படிங்க : 2016 தேசத்துரோக வழக்கு; கனையா குமாருக்கு சம்மன்!