டெல்லி: பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் 2008ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அக்ஷய் குமார் மற்றும் அஜய் சேத்தி ஆகிய 5 பேரை குற்றவாளிகள் என கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அறிவித்தது.
மேலும், அவர்களுக்கான தண்டனை விபரம் இன்று (நவ. 25) அறிவிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களில் நான்கு நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பத்திரிக்கையாளரான சௌமியா விஸ்வநாதன் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அதிகாலை அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு வசந்த் குஞ்ச் பகுதியிலுள்ள தனது வீட்டிற்குச் செல்லும் போது தெற்கு டெல்லி நெல்சன் மண்டேலா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் அப்பகுதி வழியாக வந்த நபர்கள் சௌமியா விஸ்வநாதன் உயிரிழந்ததைக் கண்டு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சௌமியா விஸ்வநாதன் கொலைக்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் 2009ஆம் ஆண்டு ஜிகிஷா கோஷ் என்ற பெண்ணின் கொலை வழக்கில் ரவி கபூர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் காவல் துறையினர் விசாரணை செய்யும் போது பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்த காவல் துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்ய எச்.ஜி.எஸ்.தலிவால் தலைமையில் குழு அமைத்தனர்.
2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் வேலை முடித்து வீடு திரும்பிய சௌமியா விஸ்வநாதனிடம் வழிப்பறி செய்வதற்காக அவரது காரை மறித்துள்ளனர். மேலும் நாட்டு துப்பாக்கியை வைத்து அவரை சுட்டு உள்ளனர். இதில் சௌமியா விஸ்வநாதன் உயிரிழந்துள்ளார். ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அக்ஷய் குமார் மற்றும் அஜய் சேத்தி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை காவல் துறையினர் சேகரித்தனர்.
இந்த நிலையில், சௌமியா விஸ்வநாதன் தந்தை எம்.கே.விஸ்வநாதன் மற்றும் தாயார் மாதவி விஸ்வநாதன் ஆகியோர் தனது மகளை இழந்துவிட்டோம் அவள் மீண்டும் வரப் போவதில்லை. ஆனால் அதற்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில், 15 ஆண்டுகளுக்குப் பின் தற்போது டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே 5 பேர் குற்றவாளிகள் என அக்டோபர் 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். மேலும் தண்டனை விபரங்கள் நவம்பர் 25 இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே இன்று (நவ. 25) வழங்கிய தண்டனையில் குற்றவாளிகள் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாம் குற்றவாளி அஜய் சேத்திக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2023 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் ஒரு அலசல்!