டெல்லி: இந்தியாவின் தடுப்பூசி கொள்கை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் "நாட்டின் 18 முதல் 45 வயது வரையிலான குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் கடமையிலிருந்து அரசு நழுவும் போக்கை கடைபிடிக்கிறது. மேற்கண்ட வயதினருக்கு அரசு இலவச தடுப்பூசி தராமல், அவர்கள் அதிக அளவிலான கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சூழலுக்கு தள்ளியுள்ளது. மத்திய அரசின் இந்த கொள்கை காரணமாக மாநில அரசுகளின் நிதி நிலைமை மிகவும் மோசமாகும்.
எந்தவித நியாயமும் இன்றி அரசு இதுபோன்ற பாரபட்சமான போக்கை கடைபிடிப்பது கவலைக்குரியது. நாடு இதுவரை கண்டிராத சவாலான காலகட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், மக்களின் துயரில் அரசு லாபம் பார்க்கத் துடிப்பது வேதனைக்குரியது. கூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக மத்திய அரசு உருவாக்கியுள்ள தடுப்பூசி கொள்கையை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அமைத்துள்ள நிலையில் சீரம் இந்தியா நிறுவனம் தடுப்பூசிக்கான விலை நிர்ணய பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசுக்கு 150 ரூபாய் எனவும் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் எனவும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.