மைசூர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி "பாரத் ஜோடோ" என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார். செப்டம்பர் 11ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவரின் இந்த நடைபயணம், அடுத்ததாக கேரளா சென்றது.
தற்போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டு வருகிறார். 26ஆவது நாளான இன்று(அக்.3) காலை ராகுல் காந்தியும், காங்கிரஸ் தொண்டர்களும் மைசூரில் நடைபயணத்தைத்தொடங்கினர். மாண்டியா மாவட்டத்துக்குள் பயணம் மேற்கொண்டு வருவதாகத்தெரிகிறது. ஆயுதபூஜை, விஜயதசமி காரணமாக நாளையும், நாளை மறுநாளும் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை நிறுத்தி வைக்கவுள்ளதாகத் தெரிகிறது. அதன் பிறகு வரும் 6ஆம் தேதி மீண்டும் பயணத்தைத் தொடங்குவார்.
இந்த நிலையில், பாரத் ஜோடோ பயணத்தில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மைசூர் சென்றுள்ளார். வரும் 6ஆம் தேதி ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடாமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பெரிய கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதையும் படிங்க: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - கொட்டும் மழையில் ராகுல் காந்தி உரை